ஆங்கில கட்டுரையின் தமிழாக்க தொடர்ச்சி...
காந்தி சாதி அமைப்பை இந்து மதத்தின் ஓர் களங்கம் என்றே கருதினார். சாதி அமைப்பு சில ஆக்கப்பூர்வ பங்களிப்புகளையும் ஆற்றியுள்ளது என்று அவர் கூறியதன் பின்னணியில் அவருடைய சத்திய வேட்கை மட்டுமே இருக்கிறது. அதாவது சாதி அமைப்பின் சாதக பாதக அம்சங்கள் என இரண்டையுமே கணக்கில் கொள்ள வேண்டும் என அவர் கருதினார். காந்தி எப்போதும் தீண்டத்தகாதவர்களின் நண்பனாகவே இருந்து வந்தார், அவர்களின் நிலையை கண்டு வருந்தினார். அவர் தீண்டத்தகாதவர்களை தன் ஆசிரமத்திற்குள் அனுமதித்து தீண்டாமைக்கு எதிராக போராடினார். அப்படி அவர் செயலாற்றியதற்கு பல இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், பலர் நிதியுதவியை நிறுத்தினர், ஆனால் அவர் அதை கைவிடவில்லை. “நம்மைவிட ஒருவர் தாழ்ந்தவர் என நம்புவது மிகப்பெரிய பாவம், அந்த பாவமே நம்மை களங்கப்படுத்துகிறதே ஒழிய இவர்களின் தொடுகை அல்ல..சாதி அமைப்பு என்பது இந்து மதத்தின் ஓர் களங்கம் தான் அதை நாம் முடிவுக்கு கொண்டுவந்தாக வேண்டும்” என்றார் அவர்.