Friday, March 8, 2013

காந்தியும் பெண்களும் - 1- ராஜ்குமாரி அம்ரித் கௌர்இந்திய வாழ்வும் சிந்தனையும், ஏன், உலக வாழ்வும் சிந்தனையும்,  காந்தியின் பல்வகைப்பட்ட பங்களிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் பெண்கள், அதிலும் குறிப்பாக, இந்திய பெண்கள் அவருக்குப் பிரத்யேகமாகக் கடன்பட்டிருக்கின்றனர்.

காந்தியுடன் கௌர் 

சத்தியத்திலும் அகிம்சையிலும் உறுதியான நம்பிக்கை கொண்ட ஒருவரின் இதயம் ஒடுக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட அனைவரையும் நோக்கி ஆதூரத்துடனும் புரிதலுடனும் நாடிச் செல்வது இயல்பான செயல்தான். 'ஒரு தாயாகவும், மனிதனை உருவாக்குபவளாகவும், அமைதியாக அவனுக்குத் தலைவியாக இருப்பவளாகவும்' அவர் மதித்த பெண், தன்னை முற்றிலும் இழந்து ஆணின் வேலைக்காரியாக மட்டும் மாறிவிட்டதை நினைக்கும்போதெல்லாம் காந்திக்கு துயரம் ஏற்பட்டது.பெண்ணுரிமை விஷயத்தில் காந்திக்கு சமரசம் செய்து கொள்ள இடமே கிடையாது. 'ஆணுக்கு இல்லாத எந்த ஒரு சட்டமும் பெண்ணுக்கு தடையாகி அவளைத் துன்புறுத்தக் கூடாது என்பதுதான் என் கருத்து. நான் என் மகள்களையும் மகன்களையும் பூரண சமத்துவ நிலையில் இருத்தி வைக்க வேண்டும்." 

'பெண்ணுக்கு சுதந்திரம் இருக்க முடியாது' என்று மனு சொல்லியிருப்பதன் அடிப்படையிலோ ஸ்மிருதிகளில் உள்ள சில கருத்துகளை ஆதாரமாகக் கொண்டோ அவரோடு விவாதம் செய்தவர்களை அவர் கொஞ்சமும் பொருட்படுத்தியது கிடையாது. 'பெண் விடுதலையைத் தன் விடுதலையாகக் கருதுபவர்களும் அவளை மானுட இனத்தின் தாயாகப் போற்றுபவர்களும் இவர்களை மதிக்கக்கூட மாட்டார்கள்'. பெண்களுக்கு எதிரான பாடல்களை மேற்கோள் காட்டி தங்கள் பழமைவாதத்தை சமய நம்பிக்கையின் ஒரு அங்கம் என்று பொருள்பட நியாயப்படுத்துபவர்களை காந்தி வன்மையாகக் கண்டித்தார். ஏதேனும் ஒரு நிறுவன அமைப்பு, 'ஸ்ருதி ஸ்மிருதி போன்றவற்றை திருத்தி எழுத வேண்டும், அற விழுமியங்கள் அல்லாதவற்றையும் சமயம் மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படை நெறிகளுக்கு எதிரானதாக உள்ளவற்றையும் நீக்க வேண்டும், இப்படிப்பட்ட ஒரு நூலை இந்துக்களின் வழிகாட்டுதலுக்காக வெளியிட வேண்டும்' என்பது அவரது பரிந்துரையாக இருந்தது. 

சனாதன இந்து என்ற சொல்லின் உயர்ந்த பொருளில் காந்தி மிகச் சிறந்த சனாதனியாக இருந்தாலும், "சட்டம் கொலை செய்கிறது, அதன் மறைபொருளே வாழ்விக்கிறது' என்பதை அவர் உணர்ந்திருந்தார்... சிறு அநீதியையும் அவர் வன்முறையாகவும் பொய்மையாகவும் உணர்ந்தார். அகிம்சை இல்லாமல் சத்தியம் இல்லை என்பது எப்போதும் அவரது நம்பிக்கையாக இருந்தது, சத்தியம் இல்லாமல் அகிம்சை இல்லை என்றும் அவர் நம்பினார்.

பெண்களைக் கைம்பெண் நிலையைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வைத்தல், அதிலும் குறிப்பாக குழந்தைகளை விதவையாக்குதல் என்ற குற்றச் செயல், பால்ய விவாகம், பலதார மணம், விபசாரம் என்ற பாபம், பர்தா முறையின் குரூரம், ஏன், ஆணுக்கு இணையாக பெண் வாழக்கூடியது எதுவாக இருந்தாலும் அதற்கு எதிரான அனைத்தையும் காந்தி வன்மையாகக் கண்டித்தார், போராடினார். இது பற்றிய அவரது கருத்துகளை நாமனைவரும் வாசிக்க முடிகிறது. இந்திய பண்பாட்டில் எது மிகவும் பெருமை வாய்ந்ததோ அதை எந்த வகையிலும் பெண் விடுதலையும் அவளது சுதந்திரமும் ஊடறுக்காது என்பதும் இந்திய பெண்மைக்கேயுரிய நளினமும் தன்னடக்கமும் அதற்கு இடம் கொடுக்காது என்பதும் அவரது நிலைப்பாடாக இருந்தது. 

சபர்மதியிலும் சேவாகிராமத்திலும் அவரது பொறுப்பில் வாழ்ந்த சிறுமிகளும் பெண்களும் சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையோடும் இருந்தனர், இது காண்பதற்கரிய ஒரு காட்சியாக இருந்தது. சமுதாயத்தில் வேறெங்கும் அப்போது இது போன்ற ஒரு நிலையைப் பார்த்திருக்க முடியாது. வாழ்வின் எந்த துறையிலும் பெண்கள் வெற்றி பெறும்போது அவர் பெற்ற மகிழ்ச்சி ஈடு இணையற்றது. ஆசிரமம் தொடர்பாக சக ஊழியர்களின் கருத்தை நாடும்போதும், புதிதாக எதைத் துவக்கும்போதும், பெண் ஊழியர்களின் எண்ணங்களை சம அளவில் கவனித்து மதித்து தன் கருத்தில் ஏற்றுக் கொண்டார்.

இந்திய பெண்களுக்கு விழிப்புணர்வு அளித்தவை அனைத்தையும்விட அதற்கு மிக வலிமையான காரணமாக இருந்தது அகிம்சை என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவின் அரசியல் விடுதலை போராட்டத்தில் காந்தி பெண்களுக்கு இடமளித்தார். பாதுகாப்பான தங்கள் இல்லங்களை விட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் வெளியே வந்தனர். நெருப்பைப் போன்ற ஒரு சோதனையின் உலையில் சிறிதும் அச்சமின்றி நின்றனர். இந்தச் சோதனையில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். ஆண்களைப் போலவே பெண்ணாலும் தீமையையும் வன்முறையையும் எதிர்த்துப் போராட முடியும் என்றும்  பெண்ணுக்கும் தலைமைப் பண்புகள் உண்டு என்பதையும் உறுதிப்படுத்தினர். 

இந்தியாவின் மீட்சியைப் பொருத்தவரை ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் சம நிலையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது அவர்களுக்கு என்று ஒரு தனி இடத்தைத் தந்திருக்கிறது. இதுவே பெண்களிடம் நம்பிக்கை ஏற்படவும், காந்தியின் வழிகாட்டுதலுடன் இந்த தேசத்தின் தலைவர்கள் உயர் பதவிகளில் பெண்களை நியமிக்கவும் காரணமாக இருந்திருக்கிறது. இந்தியாவின் புதிய அரசியலமைப்பு சட்டம் வாழ்வின் எத்துறையிலும் பால் வேற்றுமை ஒரு தடையாக இருப்பதை அனுமதிக்காது.

ஆணுக்கு இணையானவளாக பெண்கள் இருக்க வேண்டும் என்று சொல்லும்போதே காந்திஜி அவளிடம் அதிகம் எதிர்பார்க்கவும் செய்தார். ஆக்கப்பூர்வ செயல்திட்டத்தின் துண்டுப் பிரசுரம் அவரால் 1941ஆம் ஆண்டு சேவாகிராமத்திலிருந்து பர்தோலி செல்லும் ரயிலில் எழுதப்பட்டது. அப்போது நான், "பெண்கள் மேம்பாடும் இதில் இடம் பெறுவதென்பது எவ்வளவு சோகமான விஷயம்!" என்று அவரிடம் சொன்னது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. "தீண்டாமை ஒரு பெருஞ்சோகமென்றால், இதுவும் அதே அளவுக்கு ஒரு பெருஞ்சோகம்தான். பெண்களை நண்பர்களாகவும் சகாக்களாகவும் கருதாமல் தங்களை அவர்களுடைய எஜமானர்களாக நினைத்துக் கொண்டிருப்பது தவறு என்று பலமுறை ஆண்களை நான் கண்டித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் இந்த நிலையில் இருப்பதில் உங்களுக்கும் பெருமளவு பங்கிருக்கிறது." என்றார் அவர்.

'சரணடைதல்' 'தோல்வி' போன்ற சொற்கள் அவரது அகராதியில் கிடையாது. ஏனெனில் அடக்குமுறையைவிட தார்மீக நியாயத்தின் ஆற்றல் வலுவானது என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. எல்லாம் வல்ல இறைவன் இந்த உலகில் எதையும் காரணத்தோடுதான் படைத்திருக்கிறான். பெண் மெலியவள், ஆனால் அவளது மென்மையின் காரணமாகவே அவள் ஆண்களைவிட மேன்மையானவளாகவும் இருக்கிறாள் என்று நம்பினார் காந்தி. அவளது ஆன்மசக்தி உயர்ந்தது என்பதை இதற்கு காரணமாகச் சொன்னார் அவர். 'அகிம்சையைத் துணிவோடு கடைபிடிக்கவும் அதில் பரிசோதனை முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவும் ஆணைவிடப் பெண்தான் தகுந்தவள். என்றுமே தியாகம் செய்வதில் ஆணைவிட பெண்ணே முன்னிற்கிறாள். பெண்ணின் வீரத்தோடு ஒப்பிட்டால் ஆணின் வீரம் மூர்க்கமானது" 

வன்முறை பெண்ணின் இயல்பல்ல என்பதை அவர் மீண்டும் மீண்டும் சொன்னார். அதே சமயம் தன்னுள் உள்ள ஆற்றல் குறித்த விழிப்பு அவளிடம் இல்லாத காரணத்தால் பெண் ஆணுக்கு அடிமையாகிவிட்டது குறித்து அவருக்கு மிகுந்த வருத்தம் இருந்தது. 'பெண் அகிம்சையின் அவதாரம். அகிம்சை என்றால் அளவற்ற அன்பு என்றே பொருள். அளவற்ற அன்பு என்று சொல்லும்போது அளவற்ற துன்பத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய இயல்பும் இருக்க வேண்டும் என்றாகிறது. ஆணின் தாயான பெண்ணையன்றி வெறு யாருக்கு இந்தத் தகுதி அளப்பரிய அளவில் உள்ளது? ஒன்பது மாதங்கள் ஒரு சிசுவைத் தாங்கி, அதற்கு பிறப்பளித்துப் பாலூட்டுவதில் உள்ள துன்பத்தில் அவள் மகிழ்ச்சியடைகிறாள். பிரசவ வலி போல் தாள முடியாத எதுவும் உண்டா? ஆனால் படைப்பின் ஆனந்தத்தில் அவள் அதை மறந்துவிடுகிறாள். தன் பிள்ளை நாளுக்கு நாள் வளர்ச்சியடைய வேண்டும் என்று நாளெல்லாம் உழைப்பவள் யார்? அந்த அன்பை அவள் மானுடத்தை நோக்கித் திருப்பட்டும். மனிதனின் காமத்துக்கான பாத்திரமாக தான் இருந்ததை, இருக்க முடியும் என்ற எண்ணத்தை அவள் மறக்கட்டும். ஆணின் தாயாகவும், ஆணை உருவாக்குபவளாகவும், ஆணின் மௌனமான தலைவியாகவும் அவள் அவனருகில் நிற்பாள். போரிடும் இந்த உலகம் அமைதியின் அமுதத்தை தாகத்துடன் தேடிக் கொண்டிருக்கிறது, அந்த அமைதிக் கலையை புகட்டுவது பெண்ணுக்கே கடமையாக்கப்பட்டிருக்கிறது. புத்தகப் படிப்புக்கான தேவையில்லாத சத்யாகிரகத்துக்கு அவள் தலைமை தாங்க முடியும். அதன் தேவை துன்பத்திலும் நம்பிக்கையிலும் பிறந்த உறுதியான உள்ளம்தான்"

நன்றி : http://www.mkgandhi.org/articles/kaur.htm

-அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்- 
- அ. சந்திரசேகரன்

1 comment:

  1. //'பெண் அகிம்சையின் அவதாரம். அகிம்சை என்றால் அளவற்ற அன்பு என்றே பொருள். அளவற்ற அன்பு என்று சொல்லும்போது அளவற்ற துன்பத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய இயல்பும் இருக்க வேண்டும் //

    காந்திஜி பெண்களுக்கு அவர்களுக்குண்டான சமூக‌ 'ரோலை' பரவலாக எல்லா மகளிரும் அறியும் வண்ணம் செய்தார். அமைதியும், அஹிம்ஸையும், அன்பும் என்ன சாதிக்கும் என்பதை அன்னை ஸ்ரீசாரதாமணி தேவியாரும், அன்னை கஸ்தூரிபாயும் வாழ்ந்து காட்டினார்கள்.

    "என்னைப் பரமஹம்ஸன் என்று எல்லோரும் சொல்கிறார்கள் என்றால் அது சாரதாவால்தான் எனக்குக் கிடைத்த பெருமை" என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்.

    ReplyDelete